

குற்ற வழக்கு உள்ள 81 பேரை வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்குத் தடை விதித்தும், 658 பேரை வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு அனுமதி அளித்தும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சட்டம் படித்தவர்களில் குற்ற வழக்கு உள்ளவர்களை வழக்கறிஞராகப் பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் ஆனந்தமுருகன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஆக. 2-ல் நடைபெறவிருந்த வழக்கறிஞர் பதிவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களும் நீதிபதி என். கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுபாஷ்பாபு, வழக்கறிஞராகப் பதிவு செய்ய விண்ணப்பித்த 699 பேரின் பெயர்ப் பட்டியலையும், அதில் குற்ற வழக்கு உள்ள 41 பேரின் பெயர்ப் பட்டியலையும் தாக்கல் செய்தார். மேலும், வழக்கறிஞர் பதிவுக்கு விண்ணப்பித்து ஆவணங்கள் குறைபாடு காரணமாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளோரில் 40 பேர் மீது குற்ற வழக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளோரில் குற்ற வழக்கு உள்ள 81 பேரை வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கூடாது. எஞ்சிய 658 பேரையும் வழக்கறிஞராகப் பதிவு செய்யலாம்.
வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை நடைபெற்ற பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள், தேர்வில் தோல்வி அடைந்ததால் வழக்கறிஞர் பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை பார் கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஸ்டிக்கர் ஒட்டத் தடை விதிக்க அறிவுறுத்தல்..
வழக்கறிஞர் ஸ்டிக்கர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்களிலும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பாக செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வழக்கறிஞர்கள் காண்பித்தனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் மோசடியாக பயன்படுத் துவதைத் தடுக்கும் வகையில், ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தடை செய்வது தொடர்பாக பார் கவுன்சில் கருத்து தெரிவிக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் மத்திய சட்டத் துறை செயலர், மாநில சட்டத் துறை செயலர், இந்திய சட்ட ஆணையம், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோரை நீதிமன்றம் தாமாகவே எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிடுகிறது. இவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை புதன் கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.