எல்லா துறைகளிலும் திமுக அரசு தோல்வி: பழனிசாமி குற்றச்சாட்டு

எல்லா துறைகளிலும் திமுக அரசு தோல்வி: பழனிசாமி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

நாட்டில் எவ்வளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை தான் கவனிக்கின்றனர். மக்களுக்காக உழைத்தவர் எம்ஜிஆர் மட்டுமே. சிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்தி வருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் ஆட்சி அதிகாரத்துக்கும், பதவிக்கும் வர முடியும்.

அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் முதல் மாநிலம் தமிழ்நாடு. மோசமான முதல்வர் பட்டியலிலும் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். கஞ்சா விற்காத இடமே இல்லை.தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்போது இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடுமையான வரி விதிப்பு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. மின் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை. எல்லா துறைகளிலும் தோல்வியடைந்த அரசாக திமுக அரசு உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு எடுக்கும் அரசு இது.

இந்த ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. அதை எடுத்து சொல்லவே இந்த கூட்டம். இதற்கு காவல் துறை அனுமதி தர மறுக்கிறது. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று இக்கூட்டத்தை நடத்துகிறோம்.

அம்மா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறையை தீர்த்தது அதிமுக அரசு. இந்த திட்டத்தின் மீது, திமுக ஸ்டிக்கரை ஒட்டி, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என செயல்படுத்துகின்றனர்.

எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை. மக்களின் வலிகளை புரிந்துகொண்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in