

கடலூர்: மகப்பேறு காலத்தில் தாய் - சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் மிகக் குறைவாக உள்ளது என்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவனையில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாடு சுகாதாரத் துறை செயல்பாட்டால் மாநிலத்தின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்திய அளவில் 1,000 பேருக்கு 19.5 பேர் என்ற விகிதம் இருக்கும் நிலையில், தமிழகத்தின் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 13.8 என்ற நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் நடைமுறைப் படுத்துவது தான். இத்திட்டம் மிகப்பெரிய பலனை அளித்து வருகிறது.
‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 2.12 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக அரசு செலவிட்ட தொகை ரூ.185.36 கோடியாகும். தேசிய அளவில், மகப்பேறு காலத்தில் ஒரு லட்சம் பேரில் 103 தாய்மார்கள் இறக்கின்றனர் என்ற புள்ளி விவரம் வெளியாகி இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரில் 52 பேர் மட்டுமே இறக்கின்றனர். குழந்தைகள் இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது அகில இந்திய அளவில் 1,000 குழந்தைகளில் 28 பேர் இறக்கின்றனர். தமிழகத்தில் 1,000 குழந்தைகளில் 13 பேர் மட்டுமே இறக்கும் சூழல் உள்ளது. இதற்கு காரணம் நகர்ப் புற மற்றும் ஊரக பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் சிறப்பான செயல்பாடுகளே” என்று தெரிவித்தார்.
பகுதி நேரம் என பணியமர்த்தி..: அப்போது அமைச்சரிடம், ‘மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்களுக்கு 4 மணி நேர வேலைக்கு ரூ.4,500 என்ற நிலையில் பணியமர்த்தப்பட்டு, தற்போது 8 மணி நேரம் வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுகிறது. பணிக்கு தொடர்பில்லாத பிரதமர் காப்பீட்டுத் திட்ட அட்டை உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் செய்ய வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்று பணியாளர்கள் தரப்பில் கூறுகின்றனர். இந்தப் பணிகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி 11,100 பேரில் 2 ஆயிரம்பேர் வரை அப்பணியில் இருந்து விடுவித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?’ எனகேட்டபோது, “அதுபோன்று யாரும் பணியில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை” என்றார்.
செவிலியர்களின் சிக்கல்: ‘மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு, கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?’ என்று கேட்டதற்கு, “இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
‘செவிலியர்களின் ஆதார் மற்றும் பான்கார்டு இணைப்பு சரிவர இணைக்க முடியாத நிலையில், அவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கடந்த ஓராண்டாக செலுத்தப் படாமல் இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறதே?’ என கேட்டதற்கு ‘‘ இது தொடர்பாக உரிய ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.