Published : 01 Feb 2024 04:08 AM
Last Updated : 01 Feb 2024 04:08 AM
மதுரை: அரசு நினைத்தால் தாமிரபரணியை ஒரே நாளில் சுத்தம் செய்துவிட முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகளவில் பிளாஸ்டிக், குப்பைக் கழிவுகள் மற்றும் முள்செடிகள் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டன.
தற்போது தாமிரபரணி ஆற்றில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக், குப்பைக்கழிவுகள் ஆற்றின் கரையில் குவிந்துள்ளன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு ஆறு மாசடையும் நிலை காணப்படுகிறது. எனவே, தாமிரபரணி ஆற்றுக் கழிவுகளைத் தகுதிவாய்ந்த நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ண குமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் குப்பைகள், சாக்கடைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தின் ஒரே குடிநீர் ஆதார மாக உள்ள தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 18 கிமீ தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றைச் சுத்தப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் வங்கிகளின் நிதி பங்களிப்புடன் ஆற்றைச் சுத்தப் படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், தாமிரபரணி ஆறு தென் மாவட்டத்தின் மிக முக்கிய ஆறு. இந்த ஆற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தாமிர பரணி ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
அரசு நினைத்தால் ஒரே நாளில் தாமிரபரணியைச் சுத்தப்படுத்தலாம். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படை, தேசிய சேவைத் திட்ட மாணவர்களைக் கொண்டு தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணிகளை அரசு மேற்கொள்ளலாம்.
தாமிரபரணி ஆற்றில் குவிந் துள்ள பிளாஸ்டிக், குப்பைக் கழிவுகளை அகற்ற எவ்வளவு நாள் ஆகும்? ஆற்றைச் சுத்தப்படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? தாமிரபரணியில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டு வோர் மற்றும் சாக்கடை கழிவுகளைக் கலப்போர் மீது அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்த எடுக்கப் படவுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT