40 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறையின் கலைத் திருவிழா போட்டிகள்: வெற்றி பெற்ற 1,418 பேருக்கு பரிசுகள்

40 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறையின் கலைத் திருவிழா போட்டிகள்: வெற்றி பெற்ற 1,418 பேருக்கு பரிசுகள்
Updated on
1 min read

சென்னை: மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 1,418 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க 40.26 லட்சம் வரையான விண்ணப்பங்கள் வந்தன.

அவற்றில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று. மாநிலப் போட்டிக்கு 15,930 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையான பிரிவில் 198 பேர். 9. 10-ம் வகுப்பு பிரிவில் 599 பேர், 11, 12-ம் வகுப்பு பிரிவில் 621 பேர் என மொத்தம் 1.418 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இதற்கிடையே ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். அதன்படி திருச்சி பிராட்டியூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர் கா.சாய் கிரிஷ், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அரசுப் பள்ளி மாணவர் வெ.ஜெய் நிக்கேஷ், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசுப்பள்ளி மாணவர் சு.சுஜின் ஆகியோர் கலையரசன் விருதுக்கும், கோவை ஷாஜ ஹான் நகர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவி வே.மா.தமிழிசை, பெரம்பலூர் வேப்பந்தட்டை, அரசுப்பள்ளி மாணவி செ.பார்க்கவி, தஞ்சாவூர் பாபநாசம் அரசுப் பள்ளி மாணவி ஜே.பென்சீரா ஆகியோர் கலையரசி விருதுக்கும் தேர்வாகினர்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று முன்தினம் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அதேபோல், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பிரிவில் திருச்சி அய்யம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர் சஞ்சய், தஞ்சை திருக்கருகாவூர் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்திவேல் ஆகியோருக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டன. தற்போது வெற்றி பெற்ற மாணவர்களில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in