

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் 2,411 ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன. ஏரிக் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராகஉள்ளது.
ஏரியின் முழுக் கொள்ளளவான 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த ஏரியின் மூலம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ளகடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஏரியில் வண்டல் மண் படிந்து தூர்ந்துள்ளதால், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ரூ.120 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை கடந்த 2021 முதல் பொதுப்பணித்துறையின் பாலாறு கீழ்வடி நிலக்கோட்டம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக, கலங்களை உடைத்து ஏரியிலிருந்த நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து மீண்டும் நீரை சேமிக்கும் வரை, பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மதுராந்தகம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஏரியின் கலங்கள் மற்றும் கரைகளை உடைத்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதால், மழை பெய்தாலும் ஏரியில் தண்ணீரை சேமிக்க வாய்ப்பு இல்லை. இதனால், பாசனத்துக்கு தண்ணீரின்றி 2,853 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மதுராந்தகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30-க்கும்மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியில் கடந்த 2 ஆண்டுகளாக நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும், 2 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் உள்ளதால் விளைநிலங்கள் தரிசு நிலமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதனால், ஏரியின் தூர்வாரும் பணிகளால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், குறைந்த அளவிலான தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யும் வகையில், வேளாண்துறை மூலம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி, தேவையான உபகரணங்களை மானிய விலையில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்வும். இதுதவிர, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஏரியின் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.