

ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்து செல்வார், தீராத வேதனையைத் தருவார், என்று, கனவில் கூட நாம் நினைத்துப் பார்த்ததில்லை என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) ஜெயலலிதா உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது. திறப்புவிழாவில் உரையாற்றிய ஓபிஎஸ், "ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், நிலைத்த புகழோடு, நீக்கமற நம்முள் நிறைந்திருக்கிறார். அவர் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார், தீராத வேதனையைத் தருவார், என்று கனவில் கூட நாம் நினைத்துப் பார்த்ததில்லை.
அவரது துணிச்சலும், வீரமும், அறிவாற்றலும் மடை திறந்த வெள்ளம் போல் வரும் ஞானமும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டியது இந்த சட்டமன்றத்தில்தான்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது, அவர் ஒருவரைத் தவிர, ஏனைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் தனி ஒருவராக பேரவைக்கு வந்து, சிங்கம்போல கர்ஜித்தார்.
மக்களுக்கான திட்டங்களைத் தந்து, மக்களால் நான்... மக்களுக்காகவே நான்... உங்களால் நான்... உங்களுக்காகவே நான்... என்ற சத்திய வாசகத்தை, சரித்திரமாக மாற்றி காட்டினார்.
ஒரு தாய்க்குத்தான் தெரியும், பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. அம்மாவுக்குத்தான் தெரியும், தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று, என்று மக்கள் மனம் மகிழ்ந்து, மன நிறைவு பெற வைத்தார்.
ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்து, ஆணவத்தில் மிதந்த ராஜபக்ஷே, ஒரு போர்க் குற்றவாளி என்ற வரலாற்று தீர்மானத்தை, இதே சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய வீரமங்கை அவர்.
உயரவே உயராது என்று நினைத்திருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி தந்தவர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டமன்றம், அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியிலே, பல சரித்திர சாதனைகளை படைத்திருக்கிறது.
வரவே வராது என்ற காவேரியை வரவைப்பதற்காக, உச்ச நீதிமன்றம் சென்று, உறுதியோடு போராடி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் இடம் பெற வைத்தவர்.
ஒரு முறை ஆண்ட கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற 32 வருட அரசியல் வரலாற்றை உடைத்து, மீண்டும் இந்த சட்டமன்றத்திலே, தமிழக பெருமக்கள் ஆட்சிக் கட்டிலிலே அமர வைத்தார்.
உலகில் புண்ணியங்கள்தான் ஜெயிக்கும், என்றைக்கும் பாவங்கள் ஜெயிக்காது. தியாகங்கள்தான் ஜெயிக்கும், என்றைக்கும் துரோகங்கள் ஜெயிக்காது. பொதுநலம்தான் ஜெயிக்கும், சுயநலங்கள் ஜெயிக்காது என்ற சத்திய வார்த்தைகளை, தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டியவர்.
வாக்குகளை வாங்குவதற்காக மட்டுமே, மக்களைச் சந்திக்கின்ற தலைவர்களுக்கு மத்தியில், மக்களை வாழ வைப்பதற்காகவே, மக்களை சந்தித்த ஒரே தலைவர் அவர்.
தமிழர்களின் நலனுக்காகவே வாழ்ந்த அவரை, தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கவே மறக்காது என்பதைத்தான் அவரின் இந்த திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
என்றும் பொய்க்காத வாய்மையாலும், எதிலும் தோற்காத நேர்மையாலும், இந்த சட்டமன்றத்திற்கே பெருமை தேடித் தந்தவர். அந்த பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சட்டப்பேரவை மண்டபத்தில் அவரது திருவுருவப்படத்தை, அவரது தொண்டர்களாகிய நாம் இன்று திறந்து வைக்கிறோம்"
இவ்வாறு அவர் பேசினார்.