

சிவகங்கை: ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4-ல் திமுக எம்எல்ஏக்கள் இருப்பதால் சிவகங்கை மக்களவைத் தொகுதியை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவிடம் சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்பியாக காங்கிரஸை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள்ளார். இந்த மக்களவைத் தொகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை ( தனி ), காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி ஆகிய 2 தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை தொகுதியில் அதிமுக, காரைக்குடியில் காங்கிரஸ், மானாமதுரை ( தனி ), திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி ஆகிய 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. மேலும் கே.ஆர்.பெரியகருப்பன், மெய்யநாதன், ரகுபதி என 3 அமைச்சர்கள் உள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் உள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என நான்கு அணிகளாக மோதின. அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட சுப.துரைராஜ், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரத்தை விட 1.42 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதனால் சிவகங்கை தொதியில் காங்கிரஸை விட திமுக வலுவாக உள்ளதாகவும், தற்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என திமுகவினர் கருது கின்றனர்.
இதனால் சிவகங்கை தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜன.29-ம் தேதி சென்னையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, உதயநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் இந்த முறை சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
மேலும் கார்த்தி சிதம்பரம் எம்பி மீது சிலர் அதிருப்தியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில் ‘‘திமுகவுக்கு சாதகமாக உள்ள சிவகங்கை தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கிவிடுகின்றனர். இந்த முறை திமுகவுக்கு ஒதுக்கினால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கூறியுள் ளோம். அவர்களும் பார்ப்போம் என்று கூறியுள்ளனர்’’ என்றனர்.