Published : 31 Jan 2024 05:45 AM
Last Updated : 31 Jan 2024 05:45 AM

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் | ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் அஞ்சலி: அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர். படம்: ம.பிரபு

சென்னை: தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 77-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சி யகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், கிண்டியில் உள்ளகாந்தி மண்டபத்தில் பள்ளிச் சிறார்களுடன் சேர்ந்து காந்தியடிகளின்உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இளம் கலைஞர்களின் பஜனை நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டார்.

மேலும், அவர் தனது எக்ஸ் தளபதிவில், ‘காந்தியடிகளின் சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான, உலகளாவியஎதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் திகழும்.காந்தியடிகளின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சிமேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மதநல்லிணக்க உறுதிமொழி: மேலும், காந்தியடிகளின் நினைவு நாளை மத நல்லிணக்கநாளாக கடைபிடிக்க முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந் தார். அதன்படி, திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திமுக தலைமை அலுவலகமானசென்னை அண்ணா அறிவாலயத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், காந்தியடிகளின் படத்துக்கு கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தி.நகரில்உள்ள அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் நாகேந்திரநாத் ஓஜாவும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்: சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில், சென்னைஅண்ணா சாலை, ஈவெரா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் நேற்று காலை11 மணிக்கு வாகன ஓட்டிகள் தங்கள்வாகனங்களை நிறுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x