Published : 31 Jan 2024 04:06 AM
Last Updated : 31 Jan 2024 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காந்தியடிகள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் சட்டப்பரவைத் துணைத் தலைவர் எம்.என்.ஆர்.பாலன், முன்னாள் எம்எல்ஏ அனந்த ராமன், நீலங்காதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி.பேசியதாவது: ‘கட்சி மாறுவதற்கு பெயர் போன ஊர்’ என புதுச்சேரியை சொல்வார்கள். தற்போது அந்தக் காற்று பிஹார் பக்கம் சென்று விட்டது. பச்சோந்தியாக, எட்டப்பனாக இருப்பவர் நிதிஷ்குமார். நிதிஷ் குமாருக்கு அண்ணன் தான் ரங்கசாமி. நிதிஷ் குமார் எப்படி நாற்காலியை பிடித்து தொங்குகிறாரோ, அதைவிட மோசமாக நாற்காலியை விடாமல் ரங்கசாமி பிடித்துக் கொண்டு தொங்கு கிறார்.
புதுச்சேரியில் பாஜகவில் இருக்கக் கூடியவர்கள் யார்? இண்டியா கூட்டணி உடைந்து விட்டதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுக தான் சிதறி விட்டது. கொடி, சின்னம், யார் தலைமை ஏற்பது என்பதில் சண்டைப் போட்டு வருகின்றனர். புதுச்சேரி அதிமுக உண்மையில் பாஜகவையும், ரங்க சாமியையும் எதிர்க்கிறார்களா? அல்லது பி டீமா என்பதை அதிமுகதான் சொல்ல வேண்டும். டம்மியாக ஒருவரை தேர்தலில் நிறுத்தி விட்டு நாங்களும் தேர்தலில் நிற்கிறோம் என அதிமுக கூறக் கூடாது. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு மறைமுகமாக பாஜகவுக்கு போடக்கூடிய வாக்கு.
ராமரை வைத்து பாஜக ஓட்டு வாங்க நினைக்கிறது. கும்பாபிஷேகம் நடக்கும் கோயில்களில் மந்திரம் ஓதுவார்கள். ஆனால் ராமர் கோயிலில், மோடி வந்தது, அவர் என்ன செய்தார் என்பது தான் தெரிவிக்கப்பட்டது. இது ராமருக்கு போட்டியாக மோடிக்கு நடத்தப் பட்ட விழா. ராமர் நல்ல கடவுள். அவரை விட்டு விடுங்கள் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT