Published : 25 Feb 2018 09:59 AM
Last Updated : 25 Feb 2018 09:59 AM

இறக்குமதி மணலை தனியார் விற்க அனுமதித்தால் சட்டவிரோத மணல் குவாரிகள் பெருகும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால், சட்டவிரோத மணல் குவாரிகள் பெருகும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மணல் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித் துறைதான் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும். இந்த மணலை தனியாரின் சொந்த பயன்பாட்டுக்குக்கூட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு கடந்த 2017 டிச.8-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அரசாணைக்கு தடை

இந்த அரசாணையை எதிர்த்து தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளரான எல்.ஆதிமூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித் துறைதான் விற்பனை செய்யும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை, மணல் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர்களின் உரிமைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்துக்கும் விரோதமானது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறையின் சிறப்புச் செயலாளர் கே.பத்மநாபன் என்பவர் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் கூறியிருப்பதாவது:

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே ஒரு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் மனுதாரர் நாளிதழின் வெளியீட்டாளர். அவர் எந்தவொரு கட்டுமான தொழிலிலோ அல்லது மணல் இறக்குமதியிலோ ஈடுபடவில்லை.

இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. கனிம வள ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் விற்பனை செய்ய தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. மணல் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசே விற்பனை செய்யும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு திருச்சி மற்றும் கரூர் பகுதிகளி்ல் உள்ள மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்ததுதான் காரணம். வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை, தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால் அதன்மூலம் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும். சட்டவிரோத குவாரிகளும் பெருகும். உள்ளூர் மணலை, இறக்குமதி மணல் எனக்கூறி விற்பனை செய்வார்கள்.

இதைத்தடுக்கவே, இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித் துறை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என யாரையும் தடுக்கவில்லை. ஆனால் அதேநேரம் அதை ஒழுங்குபடுத்தி முறையாக விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் வரும் மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x