Published : 16 Feb 2018 07:19 AM
Last Updated : 16 Feb 2018 07:19 AM

காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு: போராட்டத்தை தொடர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக நேற்று நாமக்கல்லில் அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மண்டல அளவிலான டெண்டர் முறை நடத்தும் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்று 4-வது நாளாக தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் நீடித்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு டேங்கர் லாரி மூலம் காஸ் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகின்றன.

இந்த காஸ் டேங்கர் லாரிகளை இயக்க 3 ஆண்டுகளாக இருந்த ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த டெண்டர் முறையும் மாற்றப்பட்டு மாநில அளவிலான டெண்டர் நடத்தவும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, இம்மாதம் 12-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 4,200 காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக மும்பையில் நேற்று முன்தினம் மாலை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன், தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பொன்னம்பலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது மாநில அளவிலான டெண்டர் முறை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் தலையிட இயலாது என எண்ணெய் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

இதனால், நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனிடையே நாமக்கல்லில் நேற்று தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு பேசிய சங்கத் தலைவர் பொன்னம்பலம், ‘மண்டல அளவிலான டெண்டர் நடத்த வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கிறது.

வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாள்தோறும் 12 முதல் 13 ஆயிரம் டன் காஸ் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் நாள்தோறும் ரூ.2.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. கிழக்கு மண்டலத்தில் ஒரு நாள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x