

கடல் வழியாக தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு காரில் கடத்திச் செல்ல முயன்ற 14 கிலோ தங்கத்தை நாகூர் அருகே வெள்ளிக்கிழமை அதி காலை பறிமுதல் செய்த மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை யினர், கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்களைக் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வழியாக தங்கம் கடத்தப்படுவ தாக சென்னை மற்றும் தூத்துக் குடி பிரிவைச் சேர்ந்த மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை யினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நாகூர் அருகேயுள்ள வாஞ்சூர் சோதனைச் சாவடியில் வெள்ளிக் கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியும், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து காரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் நாகையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு காரை கொண்டு சென்று சோதனை யிட்டதில் 14 கிலோ தங்கக் கட்டி கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.
மொத்தம் ரூ.3.98 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரிலிருந்த நாகூர் இக்பால் மகன் முஸ்தபா கமால் (24), முகமது இப்ராஹிம் மகன் முகமது இப்ரிஸ் (32) ஆகியோரை கைது செய்தனர்.
தங்கக் கட்டிகளை கடல் வழியாக தமிழகத்துக்குக் கொண்டு வந்து, நாகூரிலிருந்து சென்னைக்கு கார் மூலம் கடத்திச் செல்ல முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.