

சென்னை: சர்வதேச வணிக நிறுவனமான லூலூ மால் அமைக்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை தரப்போவதாக தகவல் பரவியது. இதை மறுத்து தமிழக அரசு வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். இதை உண்மை என நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி அளித்த விளக்கத்தில் இந்த தகவல் முற்றிலும் தவறானது. சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும். இவ்வாறு அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி அறிக்கை
இதனிடையே பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலம், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தை பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி. அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள ரூ.3,500 கோடியைவிட இது 4 மடங்கு அதிகம். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களின் நிலத்தை தனியாரிடம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக, அந்த நிலத்தை பூங்காவாக மாற்ற வேண்டும்.
சென்னை பெருநகரில் அவ்வளவு பெரிய பூங்காக்கள் இல்லை. பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20 ஏக்கரிலும், அண்ணா நகர் கோபுர பூங்கா 15 ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன. அடையாறு தொல்காப்பிய பூங்கா 358 ஏக்கரில் இருந்தாலும் அது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கானது அல்ல. பனகல் பூங்கா, நேரு பூங்கா, திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
அதனால், சென்னையின் பசுமை போர்வை பரப்பு பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது அவசியம். அதற்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மிகச்சிறந்த தேர்வாகும். உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான உடற்பயிற்சி செய்யும் இடங்களாகவும், உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை வழங்கும் ஆலைகளாகவும் திகழ்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் நச்சு வாயுக்களை உள்ளிழுத்து, ஆக்சிஜனை வழங்க அதிக பூங்காக்கள் உருவாக்க வேண்டியது கட்டாயம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
அமைச்சர் விளக்கம்: அன்புமணி புகார் குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு பேருந்து நிலையத்தை எந்த பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றே முடிவெடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு ஷேக்கை பிடித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. அந்த இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எந்த வகையில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு செய்ய தனியார் கலந்தாலோசகரிடம் பணி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அறிக்கை அளித்த பிறகு, மக்களின் கருத்துகளை கேட்டு, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மக்களின் பயன்பாட்டுக்கு எது உகந்தது என முதல்வர் முடிவெடுப்பார். கட்டுக்கதைகளை ஒரு கட்சியை நிர்வகிக்கும் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.