Published : 30 Jan 2024 04:00 AM
Last Updated : 30 Jan 2024 04:00 AM
கோவை: கோவை மாநகர காவல் நிலையங் களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிவந்த 147 காவலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல் துறையில் தேர்தல் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் விவரம், பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணி, கடந்த கால தேர்தல் சமயங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்குவதால், மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள், முதல் நிலைக்காவலர்கள், தலைமைக் காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை பணியிடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தங்களுக்கு தேவையான பணியிடங்களை ஒதுக்க கோரி சில காவலர்கள் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக, மாநகர காவல்துறையின் பணியிடமாற்ற குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன் இறுதியில் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை மாநகரில் 147 பேரை பணியிடம் மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 52 பேர், தலைமைக் காவலர்கள் 67 பேர் உட்பட 147 காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு சரகத்தில் இருந்து வேறு சரகத்துக்கும், ஒரு சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கும், வெவ்வேறு பிரிவு காவல்நிலையங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT