Published : 30 Jan 2024 04:12 AM
Last Updated : 30 Jan 2024 04:12 AM

பிரதமருடன் காணொலியில் கலந்துரையாடிய புதுச்சேரி மாணவி: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டனர்

பிரதமர் கலந்துரையாடல் ஒளிபரப்பை அரசு பள்ளி குழந்தைகளுடன் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள். (அடுத்தபடம்) பிரதமருடன் காணொலியில் கலந்துரையாடிய புதுச்சேரி மாணவி தீப . படங்கள்: செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மாணவி, மாணவிகளுடன் பிரதமர்கலந்துரையாடல் புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பானது. இதை பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து ஆளுநர், முதல்வர் பார்வையிட்டனர்.

புதுவை பள்ளிக் கல்வித் துறையின் சமக்ர சிக்ஷா சார்பில், கம்பன் கலையரங்கில் டெல்லியில் பிரதமர் மோடி பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா ( தேர்வு பற்றிய விவாதம் ) என்ற நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பானது. இந்நிகழ்வின் தொடக்கத்தில், கல்வித் துறை செயலர் ஆசிஷ் மாதவ் ராவ் ரோரே வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் புதுச்சேரி சேதராப்பட்டு அரசு பள்ளியில், மேல்நிலை கல்வி படிக்கும் மாணவி தீப ஸ்ரீ பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி என்று அவர் குறிப்பிட்டதும், அவருக்கு பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் குறிப்பிட்டு பதில் அளித்தார். இந்நிகழ்வு 3 மணி நேரம் தாண்டியும் நடந்தது. பிரதமர் ஹிந்தியில் உரையாடியதை புதுச்சேரி கல்வித்துறையினர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது, ஒருகட்டத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு அசதியில் கண் சுழற்ற ஆரம்பிக்க அருகேயிருந்த ஆளுநரும், அமைச்சரும் அவருக்கு தேநீர் வரவழைத்து தந்தனர். பள்ளி குழந்தைகள் தரப்பில் கூறுகையில், 3 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்வு நடந்தபோது, டெல்லி நேரலையும், புதுச்சேரியில் ஆங்கில மொழி பெயர்ப்பும் ஒரே சப்த அளவில் இருந்ததால் சரியாக புரிய முடியவில்லை. தமிழில் மொழி பெயர்த் திருந்தால் பிரதமர் கூறியதை நன்கு உணர்ந்திருக்க முடியும் என்று குறிப்பிட்டனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி நன்றி கூறினார். மாநில திட்ட இயக்குநர் தினகர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x