Published : 05 Feb 2018 03:34 PM
Last Updated : 05 Feb 2018 03:34 PM

மூன்று நாட்களில் 3 பேரைக் கொன்ற காட்டு யானை: 4 முறை மயக்க ஊசி செலுத்தியபின் பிடிபட்டது

கிருஷ்ணகிரியில் கடந்த மூன்று நாட்களில் 3 பேரை மிதித்துக்கொன்ற காட்டு யானையை தீவிர முயற்சிக்குப்பின் 4 முறை மயக்க் ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

கிருஷ்ண கிரி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவது சமீபகாலமாக வாடிக்கையாகி வருகிறது. கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் வயல்வெளிகளை நாசம் செய்வது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது மனிதர்களைத் தாக்குவது வாடிக்கை.

இதை ஊர்மக்கள் கும்பலாக சேர்ந்து வெடி வெடித்து விரட்டி அடிப்பார்கள், சில நேரம் வனத்துறையினர் வந்து விரட்டி அடிப்பார்கள். ஆனால் முன்னெப்போதும் இல்லாத முறையில் யானை ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி சூளகிரி அருகே உள்ள சின்னாறு என்ற பகுதிக்குள் வந்தது.

முதல் நாள் ராஜப்பா

கடந்த 3-ம் தேதி காட்டு யானை கிருஷ்ணகிரி அடுத்த சின்னாறு பகுதியில் ராஜப்பா என்பவரை தாக்கிக் கொன்றது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் முருகன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வனத்துறையிடம் யானையை விரட்ட எந்த வித உபகரணங்களும் இல்லை என தெரியவந்தது. பட்டாசுகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக யானையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சூளகிரி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எம்.எல்.ஏ எச்சரிக்கை விட்டுச்சென்றார்.

இரண்டாம் நாள் முனிராஜ்

இந்நிலையில் மறுநாள் யாரும் வெளியே வரவேண்டாம் என சின்னாறு பகுதியில் ஊருக்குள் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. வனத்துறையினர் யானையைப் பிடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆனாலும் மறுநாள் பிப்.4-ம் தேதி மீண்டும் ஒற்றை யானை தேவர் குட்டப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரை மிதித்துக்கொன்றது. இதையடுத்து பலி எண்ணிக்கை இரண்டானது.

மூன்றாம் நாள் தேவன்

இதனால் 10 மணி நேரமாக யானையை சுட்டுப் பிடிக்க திட்டமிட்டு காத்திருந்த வனத்துறையினர் திட்டம் போட்டனர். ஆனால் காட்டு யானையைப் பிடிக்கும் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது. மீண்டும் இன்று யானை இருக்கும் இடத்தை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். மயக்க மருந்தை துப்பாக்கி மூலம் செலுத்திப் பிடிக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் இன்று காலை தேவன் என்பவரை யானை தாக்கி கொன்றது. காட்டு யானை ஊருக்குள் வந்திருப்பது குறித்து எச்சரிக்கையான வனத்துறையினர் யானையை நோக்கி மயக்க மருந்தை செலுத்தினர். ஆனால் யானை மயக்கமடையாமல் மீண்டும் காட்டுக்குள் சென்றது.

7 மணி நேர பெரும் போராட்டம்

பின்னர் காட்டுக்குள் சென்ற யானையை வனத்துறையினர் தேடி வந்ததனர். அப்போது கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி ராமாபுரம் வனப்பகுதியில் யானை இருப்பதைக் கண்டுபிடித்தனர். இரண்டாவது மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினர். ஆனாலும் யானை மசியவில்லை. மீண்டும் காணாமல் போனது. பின்னர் நீண்ட தேடுதலுக்கு பின் ஒட்டையனூர் வனப்பகுதியில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். பின்னர் 3-வது ஊசி செலுத்தி இறுதியாக 4-வது மயக்க மருந்துக்குத்தான் யானை மயக்கமானது.

கர்நாடக வனத்தில் விடப்படும்

7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் யானையைப் பிடித்து லாரியில் ஏற்றினர். இரண்டு மருத்துவக் குழுவுடன் வனத்துறையினர் கடும் முயற்சிக்குப் பின் யானையைப் பிடித்து அதற்கென பிரத்யகமான லாரியில் ஏற்றினர். யானை பத்திரமாக மீடகப்பட்டுள்ளது. இது பின்னர் கர்நாடகா மாநிலம் பன்னார்கெட்டா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும்.

மூன்று நாட்களில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி மூன்று அப்பாவிகளை யானை மிதித்துக் கொன்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x