கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: அதிமுக எம்எல்ஏ ஜக்கையனின் கார் ஓட்டுநர், பாதுகாப்பு காவலர் பலி

கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: அதிமுக எம்எல்ஏ ஜக்கையனின் கார் ஓட்டுநர், பாதுகாப்பு காவலர் பலி
Updated on
1 min read

தேனியில், எம்.எல்.ஏவை அழைத்துவரச் சென்றபோது எம்.எல்.ஏவின் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் கார் ஓட்டுநர், பாதுகாப்பு காவலர் இருவரும் பலியாகினர்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் சட்டமன்ற அதிமுக உறுப்பினராக இருப்பவர் ஜக்கையன். முன்னர் டிடிவி அணியில் இருந்த இவர் முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து 19 எம்.எல்.ஏக்களில் ஒருவர்.

கடைசி நேரத்தில் கட்சி நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மீண்டும் அதிமுக எடப்பாடி அணிக்கு தாவினார். இவர் நேற்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊரான கம்பத்திற்கு வருவதாக இருந்தது.

இதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல்லுக்கு வரும் அவரை அங்கிருந்து அழைத்துவர ஜக்கையனின் கார் சென்றது. காரை ஜக்கையனின் ஓட்டுநராக பணியாற்றும் அதிமுக தொழிற்சங்க தலைவரும், அராசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநருமான கண்ணையா ஓட்டிச்சென்றார். உடன் கம்பம் ஆயுதப்படை காவலரும், ஜக்கையனின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் குமாரும்(28) திண்டுக்கல் நோக்கி சென்றனர்.

அதிகாலையில் செம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சித்தையன் கோட்டை என்ற இடம் அருகே வரும்போது எதிரே வந்த லாரி இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் எம்எல்ஏவின் பாதுகாப்பு காவலர் குமாரும், டிரைவர் கண்ணையாவும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த எம்எல்ஏ ஜக்கையனுக்கு தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற அவர் இறந்தவர்கள் இருவரையும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் கம்பம் புறப்பட்டுச் சென்றார்.

விபத்தில் உயிரிழந்த காவலர் குமார் 28 வயது இளைஞர், திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மாத பெண் குழந்தை உள்ளது. குமார், கண்ணையா உயிரிழந்ததை கேள்விப்பட்டு உறவினர்கள்  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in