

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு 'மீடியா மேனியா' - தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடல்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது; தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது. மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவால், அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் சித்தன்னவாசல் பயணம் ரத்து: மாவட்ட நிர்வாகம் தகவல்: காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இடையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை திங்கள்கிழமை பிற்பகல் பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டைக்கு வருகை தருவிருந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியாவயல் முக்கத்தில் ஏராளமானோர் கருப்புக்கொடி காட்டத் திரண்டனர். போராட்டங்களுக்கு மத்தியில் சித்தன்னவாசல் செல்லவிருந்த ஆளுநர் ரவியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காகவும், நேரமின்மை காரணமாகவும் ஆளுநரின் வருகை ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அயோத்தி நேரடி ஒளிபரப்பு விவகாரம் | உச்ச நீதிமன்றத்தில் டிஜிபி பதில்: அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சி என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி பதில் அளித்துள்ளார்.
உங்களுடன் போட்டியிடுங்கள்; மற்றவர்களுடன் அல்ல - பிரதமர் மோடி அறிவுரை: உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும்; மற்றவர்களுடன் அல்ல என்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர், "தங்கள் பிள்ளைகளின் ரிப்போர்ட் கார்டை (மதிப்பெண் அட்டை), அவர்களின் விசிட்டிங் கார்டு என பெற்றோர்கள் கருதக் கூடாது. தங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது அவர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துவிடும்" என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்' - உத்தராகண்ட் முதல்வர் தகவல்: உத்தராகண்ட்டில் வர இருக்கும் சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31ம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்முடி வழக்கு | லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ்: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஜோர்டான் ட்ரோன் தாக்குதல் 3 அமெரிக்க வீரர்கள் பலி: ஜோ பைடன் எச்சரிக்கை: சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இதில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட். ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், எல்விஎம்ஹெச் (LVMH) பங்குகள் 30 சதவீதம் அதிகரித்த பிறகு, 2023 ஆம் ஆண்டில் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
“என் மகள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை”: சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்: ‘சங்கி’ என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா எங்குமே பேசவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதே அவருடைய பார்வை. ‘லால் சலாம்’ படம் நன்றாக வந்திருக்கிறது. மதநல்லிணக்கம் குறித்து பேசுகிறது. இப்போது நான் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருக்கிறேன், என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.