

புதுச்சேரி: இலவச லேப்டாப் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், அதில் துணைநிலை ஆளுநருக்கு தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ள துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், "பணத்தை பற்றி பேசினால் கோபம் வரும் - மருத்துவராக சம்பாதித்து விட்டுதான் இங்கு வந்துள்ளேன். சம்பாதிக்க இங்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வை முன்னிட்டு மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. கலந்துரையாடல் நிகழ்வில் மாணவர்களுடன் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரதமருடனான கலந்துரையாடல் காரணமாக மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் கூடுதல் தைரியத்தைப் பெற்றுள்ளனர். நிச்சயம் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்." என தெரிவித்தார்.
கேள்வி: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் ஆளுநருக்கும் தொடர்புள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனரே?
பதில்: இதெல்லாம் சும்மா. எனக்கு என்ன தொடர்பு இருக்கிறது. அவர்களை என்னிடம் வந்து கேட்க சொல்லுங்கள். குழந்தைகளுக்கு நல்லது செய்துள்ளோம். என்னை பொருத்தவரை எந்த தொடர்பும் இல்லை. பணத்தை பற்றி பேசினால் எனக்கு கோபம் வரும். மருத்துவராக இருந்து சம்பாதித்து விட்டுதான் இங்கு வந்துள்ளேன். சம்பாதிக்க இங்கு வரவில்லை. அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக்கூடாது.
கேள்வி: புதுச்சேரியில் ஆளுநர் போட்டியிடுவாரா என எதிர்க்கட்சித்தலைவர் சவால் விட்டுள்ளாரே?
பதில்: அவர் சவால் விட்டுக்கொண்டே இருக்கட்டும். பார்க்கலாம்.
கேள்வி: அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன்கூட இல்லை. காவலர் ஒருவருக்கு தரையில் படுக்கவைத்து சிகிச்சை தருகிறார்களே?
பதில்: அனைத்து நோயாளிகளுக்கும் சமமாக சிகிச்சை தரப்படுவது அவசியம். விசாரிக்கிறேன்.
கேள்வி: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறும் நிலையில் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி பூரண மதுவிலக்கை அமல்படுத்துமா?
பதில்: இக்கேள்வியை பாஜக தலைவரிடம் கேளுங்கள்.