Published : 29 Jan 2024 05:05 PM
Last Updated : 29 Jan 2024 05:05 PM
சென்னை: சென்னையின் புறநகரில் வளர்ந்து வரும் பகுதிகளில் மேடவாக்கமும் ஒன்று. மேடவாக்கம் அருகில் உள்ள பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக உள்ளது. ஆனால் மேடவாக்கம் ஊராட்சி பகுதியாகும். தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்புக்கு தயாராக உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.
அதிகளவில் தனி குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட இப்பகுதியில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஊராட்சியாக இருப்பதால், இப்பகுதியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படவில்லை. மழைநீர் வடிகால்களும் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலம் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் குடியிருப்புகள், தனி வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதை காண முடியும்.
குறிப்பாக, மேடவாக்கம் பகுதியின் பிரதான குடியிருப்பு பகுதியான பாபுநகரில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேடவாக்கம் பாபு நகரை பொறுத்தவரை 4 பிரதான சாலைகள் உள்ளன. மேடவாக்கம்–மாம்பாக்கம் பிரதான சாலையில் இருந்து தொடங்கும் இந்த 4 சாலைகளில் முதல் 3 சாலைகளுக்கு இணைப்பு சாலைகள் உண்டு. 4-வது சாலை மட்டும் இணைப்பின்றி துண்டிக்கப்பட்டு உள்ளது.இந்த 4 சாலைகளிலும் மழைநீர் வடிகால்கள் இல்லை.
இதனால், மழைக்காலங்களில் மாம்பாக்கம் பிரதான சாலையில் இருந்து வரும் மழைநீர், இந்த 4 சாலைகள் வழியாக பின்புறம் உள்ள தாழ்வான பகுதிகளை நோக்கிச்செல்லும்.
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போதும், மேடவாக்கம்- மாம்பாக்கம் சாலையில் இருந்து வந்த மழை நீர், பாபுநகர் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் கலந்து சாலையிலேயே வழிந்தோடியது. சாலையின் இறுதியில், 3-வது பிரதான சாலைகளுக்கான இணைப்பு சாலையில் உள்ள கால்வாயில் சென்று சேர்ந்தது. அந்த கால்வாய் இந்த மழைநீரை தாங்கும் அளவுக்கு இல்லாததால், இணைப்பு சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதில், 4-வது பிரதான சாலை பாதியில் நிற்பதால், சாலையின் இறுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அதிகளவில் நீர் தேங்கியதால், இந்த சாலையின் இறுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த கதவு வழியாக, பின்புறம் உள்ள ராஜா நகருக்கு செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறும்போது, ‘‘எங்கள் சாலை மாம்பாக்கம்- மேடவாக்கம் சாலையை விட தாழ்வாக இருப்பதால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மழைநீர் அதிகளவில் வரும்போது, சாலையின் இறுதியில் உள்ளவீட்டின் உரிமையாளர், மனிதாபிமானத்துடன் தனது வீட்டு சுற்றுச்சுவரில் உள்ள கதவை திறந்து தண்ணீர் வெளியேற அனுமதிக்கிறார். அவர் அனுமதிக்காவிட்டால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும்.
இந்நிலையில், தற்போது 4-வது பிரதான சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். தற்போது 3 மற்றும் 4-வது பிரதான சாலைகளை இணைக்கும் சாலைகளில் ஒன்றில்சாலை போடுவதற்கு பதில் கல் பதித்துள்ளனர். இதேபோல், அனைத்து சாலைகளையும் மாற்றி, கால்வாய் அமைத்தால் எங்கள் பிரச்சினை தீரும்’’ என்றனர்.
இதுதவிர, மேடவாக்கத்தில் வேளச்சேரி–தாம்பரம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், மாம்பாக்கம்–மேடவாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள், பாபுநகர் 1-வது அல்லது 3-வது பிரதான சாலைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
இந்த வாகனங்கள், பாபுநகர், நீலா நகர் வழியாகவேளச்சேரி- தாம்பரம் சாலையை அடைகின்றன. அரசுப் பேருந்து தவிர்த்து மற்ற கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் இந்த சாலைகளை பயன்படுத்துகின்றன. தண்ணீர், கழிவுநீர் லாரிகளும் இதில் செல்வதால், சாலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த சாலைகள் கடந்த மழைக்கு முன்னதாக சீரமைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பாபுநகர் 3-வது பிரதான சாலை புதிதாக போடப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில், தற்போது முதல் 3 சாலைகளிலும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி அப்பகுதிகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளன.
இதுகுறித்து, பாபுநகரைச் சேரந்த தனியார் நிறுவன பணியாளர் தர் கூறும்போது, ‘‘பாபுநகர் 1 மற்றும் 3-வது சாலைகளில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் அதிகளவில் பயணிப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்த சூழலில் சாலையும் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
முதல் சாலையின் இறுதிப் பகுதியில் மழைநீர் தேங்கி அந்த பகுதியும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. இதுதவிர, 1,2,3 சாலைகளை இணைக்கும் 2 குறுக்கு இணைப்பு சாலைகளும் சிதிலமடைந்துள்ளன. வாகனங்களை திருப்பிவிடுவதற்கான நடவடிக்கையை எடுத்த போக்குவரத்து காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை விரைவாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘ரூ.3 கோடி செலவழித்து பாபுநகரில் சாலை மற்றும் நீலாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. தற்போது சாலை மீண்டும் பழுதுபட்டுள்ள நிலையில், தற்காலிகமாக சீரமைத்துள்ளோம்.
அடுத்த கட்டமாக நிதி வந்ததும் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். மேடவாக்கம் ஊராட்சியை, தாம்பரம் மாநகராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியாக மாறும்போது, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT