Published : 24 Aug 2014 11:05 AM
Last Updated : 24 Aug 2014 11:05 AM

டெல்டா மாவட்டங்களில் 4.15 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு வாய்ப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிகழாண்டில் 4.15 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

நிகழாண்டில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பா பருவ சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆக.10-ம் தேதி திறக்கப்பட்டது. அணையிலிருந்து சனிக்கிழமை நிலவரப்படி திறந்து விடப்படும் நீரின் அளவு 21,000 கன அடியாக உள்ளது. கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு ஆகியவற்றில் தலா 3,000 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,250 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படு கிறது.

குறுவை சாகுபடி பொய்த்த நிலையில் முழு அளவில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இயல்பான பரப்பை விட சம்பா மற்றும் தாளடி சாகுபடி 30,000 ஹெக்டேரில் கூடுதலாக நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் வேளாண் துறையினர்.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வழக்கமான சம்பா சாகுபடி பரப்பு 1.05 லட்சம் ஹெக்டேர், தாளடி சாகுபடி பரப்பு 25,500 ஹெக்டேர் ஆகும். இதில் நிகழாண்டில் சம்பாவில் 1.13 லட்சம் ஹெக்டேரும், தாளடியில் 25,500 ஹெக்டேரும் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது என்கிறார் தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர்.

மேலும் சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகிய கடலோர பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர் வேளாண் துறையினர்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 1.08 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 25,955 ஹெக்டேரில் தாளடி சாகுபடியும் நடைபெறும். நிகழாண்டில் சம்பா 1.21 லட்சம் ஹெக்டேரிலும், தாளடி 27,500 ஹெக்டேரிலும் மேற்கொள்ள சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 36,000 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார் திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன்.

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வழக்கமாக சம்பா சாகுபடி1.02 லட்சம் ஹெக்டரிலும், தாளடி 32,000 ஹெக்டேரிலும் நடைபெறும். நிகழாண்டில் சம்பா 1,08,500 ஹெக்டேரிலும், தாளடி 20,000 ஹெக்டேரிலும் நடைபெறும் என வேளாண் துறை கணித்துள்ளது.

நாகை மாவட்டத்தில் வெண்ணாறு கோட்டத்தின் கீழ் பாசனம் பெறும் நாகை, திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம் ஆகிய வட்டாரங்களில் 40,000 ஹெக்டேரிலும், காவிரி பாசனப் பகுதிகளில் 8,000 ஹெக்டேரிலும் நேரடி நெல் விதைப்புக்கு வாய்ப்புள்ளது. இதில் இதுவரையில் 19,962 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எம்.பன்னீர்செல்வம்.

சம்பா சாகுபடியைப் பொறுத்தவரையில் அதிக வயதுடைய சி.ஆர்.1009, மத்திய கால ரகங்களான பிபிடி 5204, ஆடுதுறை 38, 39 மற்றும் 46 ஆகிய நெல் ரகங்களே அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முனைப்பு இயக்கம் என்ற பெயரில் கிராமங்களில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், விதைகள், உரம் உள்ளிட்டவைகளை மானிய விலையில் பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், சம்பா சாகுபடிக்கு கடைமடை வரை சீரான பாசனம், பயிர்க்கடன், இடுபொருள்கள் விநியோகம் ஆகியவற்றையும் முறையாக மேற்கொண்டால் சாகுபடி பரப்பு இலக்கைவிட கூடுதலாகும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x