பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழக பாஜக சார்பில், விஸ்வகர்மா திட்டத்தின் பயிற்சி முகாம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, திட்ட மாநில பொறுப்பாளர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக பாஜக சார்பில், விஸ்வகர்மா திட்டத்தின் பயிற்சி முகாம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, திட்ட மாநில பொறுப்பாளர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுடனான பயிற்சி முகாம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது.

பயிற்சி முகாமுக்கு திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில விவசாய அணித் தலைவரும், தமிழக விஸ்வகர்மா திட்டத்தின் பொறுப்பாளருமான ஜி.கே.நாகராஜன் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, மத்திய அரசின் விஸ்வர்மா திட்டத்தை, ஏழைமக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது, அந்த திட்டத்தில் அவர்களை எப்படி இணைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொறுப்பாளர்களுக்கு திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப் வழங்கினார்.

இது தொடர்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியதாவது: பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டுசெல்வதையும் இந்த திட்டம்நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதும் நோக்கமாகும்.

18 வகையான தொழில்கள்: அந்தவகையில், இந்த திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தயாரிப்பவர் மற்றும் தைப்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெறுவார்கள்.

அதன்படி, பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும், முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன்கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி,இந்த திட்டத்தில் அவர்களை இணைத்து பயன்பெற செய்வார்கள். இது தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in