Published : 16 Feb 2018 09:02 AM
Last Updated : 16 Feb 2018 09:02 AM

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி - பெங்களூர் இடையேயான விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 2013 ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூக்கு விமான சேவையை தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு புதுச்சேரி விமான நிலையம் நீண்ட காலமாக செயல்படாமலேயே இருந்து வந்தது.

விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் துவக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்து நேற்று முதல் விமான சேவை தொடங்கியுள்ளது.

ஸ்பைஸ்ஜட் நிறுவனத்துக்கு சொந்தமான 78 இருக்கைகள் கொண்ட சிறிய ரக பம்பாரிடியர் விமானம் நேற்று காலை 9.40 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தது. முதல்முறையாக புதுச்சேரி வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு பூக்களை கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்ட விமானம் மதியம் 12.10க்கு பெங்களூரூ சென்றடைந்தது.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக 1,584 ரூபாயும், அதிகபட்சம் ரூபாய் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவை சுற்றுலாப் பயணிகள், தொழில் முனைவோர், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று விமான நிலையத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

பயணிகள் விஜயா, செரின் கூறுகையில், "பேருந்து, ரயிலில்களில் புதுச்சேரிலிருந்து பெங்களூர் செல்ல 10 மணி நேரம் வரை ஆகும்.விமானத்தில் ஒரு மணி நேரத்தில் சென்றடைவதால் நேரம் குறையும்., இந்த சேவையை பாதியில் நிறுத்திவிடாமல் தொடர வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

அடுத்து புதுச்சேரியில் இருந்து கோவை, கொச்சின், சென்னைக்கு விமான சேவை தொடங்கும் என விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x