Published : 29 Jan 2024 05:57 AM
Last Updated : 29 Jan 2024 05:57 AM
சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு போதிய விண்ணப்பதாரர்கள் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் இடங்களை நிரப்புவதற்கான யுஜிசியின் பரிந்துரைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவின் “சப் கா விகாஸ்” (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான். இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது.
ஏற்கெனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரைவார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கின்றன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவனமயப்படுத்துகிறது. இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து பாமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக்கழக மானியக் குழு கருத்து கேட்டிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து, இறுதி விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட உள்ளது. அவ்வாறு இறுதி விதிகள் வெளியிடப்பட்டால், மத்திய உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதாக பொருள் கொள்ள முடியும்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தகுதியானவர்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் பல்வேறு சதிகளை செய்து வெளியேற்றுகின்றன.
இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் நடைமுறைக்கு வந்தால், அதை பயன்படுத்தி, மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்படும். சமூகநீதிக்கு எதிரான பல்கலை. மானியக்குழுவின் விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இந்த சிக்கலில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை திரும்ப பெறச் செய்ய வேண்டும். அத்துடன், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT