

டி.வி. விவாத நிகழ்ச்சியில் தங்களை விமர்சித்ததைக் கண்டித்து, சென்னையில் பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிலும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
விஜய் டி.வி.யில் ஞாயிறுதோறும் ‘நீயா? நானா?’ விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம், ‘மருத்துவர்களும் மக்களும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில், தேவைக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் எடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பயிற்சி டாக்டர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக சங்கத்தின் இணைச் செயலாளர் ஜானகிராமன் கூறும்போது, ‘‘நீயா? நானா? நிகழ்ச்சியில் டாக்டர்களையும் அவர்கள் அளிக்கும் மருத்துவ சேவை குறித்து தவறான தகவல் களையும் பதிவு செய்துள்ளனர். இது ஒட்டுமொத்த சுகாதார அமைப்பின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளோம். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுவோம்’’ என்றார்.
இதுகுறித்து சேனல் வட்டாரங் களில் விசாரித்தபோது, ‘‘டாக்டர்கள் பற்றியோ, அரசு மருத்துவ பரிசோதனைகள் பற்றியோ நிகழ்ச்சியில் எந்த விமர்சனமும் எடுத்து வைக்கப்படவில்லை. அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளை எடுக்கக் கூடாது என அண்மையில் எய்ம்ஸ் டாக்டர்கள் ஒரு அறிக்கை கொடுத்துள்ளனர். மத்திய அமைச்சரும் அதுபற்றி கூறியிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஒட்டியே அந்நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது’’ என்றனர்.