Published : 29 Jan 2024 04:02 AM
Last Updated : 29 Jan 2024 04:02 AM

“ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு தடை நீங்க மோடிதான் காரணம்” - அண்ணாமலை

அண்ணாமலை

கோவை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகளுக்கான தடை நீங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 2006-ம் ஆண்டு ரேக்ளா போட்டிகளுக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிரண்டி விளையாட்டு என்றார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையையும் இணைத்தனர். அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகள் தடை செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து பாஜக அரசு காளையை நீக்கியது.

மத்திய பாஜக அரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தற்போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெற காரணம் பிரதமர் மோடி தான். இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சினையே நிதிஷ்குமார் வெளியேற காரணம். இந்நிகழ்வு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை காட்டுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒரே அஜெண்டாவை தவிர வேறு எந்த கொள்கையும் இண்டியா கூட்டணிக்கு இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் 10 ஆயிரத்து 321 பேருக்கு தான் வேலை தந்துள்ளனர். பல்லடத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு செயல் இழந்துள்ளது. கேரள ஆளுநர் தர்ணா செய்த பின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநர் எது பேசினாலும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள். ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிப்பது நல்ல அரசியல் அல்ல.

இந்தியாவில் அதிக வெளி நாடு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான். அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். விஜய் உட்பட யாரும் அரசியலுக்கு வரலாம். பல கோயில் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோயில் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x