Published : 29 Jan 2024 06:12 AM
Last Updated : 29 Jan 2024 06:12 AM

அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பில் நவீன உபகரணங்கள்: மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் திறந்துவைப்பு

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இம்மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் பெட் சிடி ஸ்கேன் எனப்படும் புதிய கதிரியக்க பரிசோதனை உபகரணம், ரூ.1.62 கோடி மதிப்பில் எச்.டி.ஆர். அண்மைக் கதிர்வீச்சு சிகிச்சை கருவி, ரூ.27 லட்சம் மதிப்பில் க்ரையோஸ்டாட் ஆய்வக பரிசோதனைக் கருவி, ரூ.18.80 லட்சம் மதிப்பில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கருவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தனர்.

மேலும், ரூ.60 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கு, ரூ.50 லட்சம் மதிப்பில் திருப்புட்குழியில் வட்டார பொது சுகாதார ஆய்வகம், ரூ.60 லட்சம் மதிப்பில் எழிச்சூரில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் வட்டார பொது சுகாதார ஆய்வகம், ரூ.30 லட்சம் மதிப்பில் கரசாங்கால் மற்றும் தெற்கு மலையம்பாக்கத்தில் துணை சுகாதார நிலையம் மற்றும் சிறுதாமூரில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 7 மாணவர்களுக்குக் கண் கண்ணாடியும், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், இணை இயக்குநர் கோபிநாத், துணை இயக்குநர் பிரியாராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x