

மாநிலங்களவைத் தேர்தலுக்கான 4 வேட்பாளர்களின் பெயரை அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார்.
தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அதிமுகவின் நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு வரும் பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற முடியும். இதில் 4 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு இடம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 6-வது இடத்துக்கு திமுக சார்பில் திருச்சி சிவா போட்டியிடுகிறார்.
தேமுதிக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள், மாநிலங்களவைத் தேர்தல் குறித்த முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கொடநாட்டில் முதல்வர் ஜெயலலி தாவைச் சந்தித்து, ஒரு இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 4 இடங்களுக்கு வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, பிப்.7-ம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர்.
1. எஸ்.முத்துக்கருப்பன் (நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர்)
2. என்.சின்னத்துரை (இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)
3. எல்.சசிகலா புஷ்பா (மகளிர் அணிச் செயலாளர்)
4. விஜிலா சத்யானந்த் (நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேயர்கள் ராஜினாமா
அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல் வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர், தங்கள் மேயர் பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்து, மாமன்றத்துக்கு அறிவிப்பு கொடுத்துள்ளனர்.
வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. தற்போதைய எம்.பி.யான டி.கே.ரங்கராஜன், மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடுவார் என்றும் அவர் வரும் 27-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றும் நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.