

திருச்சி: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி ( 74 ). இலங்கை தமிழரான இவர் மீது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தல் உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இவர், வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதையறிந்த சக கைதிகள், கிருஷ்ணமூர்த்தி உயிரிழக்க அவருக்கு மருந்து, மாத்திரைகள் முறையாக அளிக்காததே காரணம் என குற்றம் சாட்டி, உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலாஜி மற்றும் சிறப்பு முகாம் அதிகாரிகள் அங்கு வந்து, கிருஷ்ண மூர்த்தி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, சக கைதிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பின்னர், கிருஷ்ண மூர்த்தி உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பிறகு இன்று அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.