

பழநியில் பக்தர்களிடம் கட்டாய காணிக்கை கேட்டு தொல்லை தருகின்றனர். அதனால் நிம்மதி யாக தரிசனம் செய்ய முடிய வில்லை என பக்தர்கள் `தி இந்து உங்கள் குரலில்’ புகார் தெரிவித் துள்ளனர்.
கடந்த காலங்களில் தைப் பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை ஆகிய நாட்களில் மட்டுமே பழநிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவர். தற்போது அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா, நேர்த்திக் கடன் செலுத்த வந்து செல்கின்ற னர்.
அதனால், வின்ச், ரோப்கார் பகுதியில் மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் கூட்டம், தினசரி அலைமோதுகிறது. கூட்ட நெரிசலில், பக்தர்கள் முடி காணிக்கை, காதுக்குத்து உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்து கீழே இறங்கு வதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. வின்ச், ரோப்காரில் டிக்கெட் எடுத்து மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மலைக்கோயில் சென்றபின் அங்கும் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்தி ருக்க வேண்டும்.
பஸ் நிலையம் முதல் கருவறை வரை
அதனால் பஸ் நிலையம், கோயில் செல்லும் அடிவாரப் பாதையில் வழிநெடுக போலி பண்டாரங்கள், தரகர்கள் நின்று கொண்டு முடி காணிக்கை டிக்கெட், தரிசன டிக்கெட் எடுத்து விரைவாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பக்தர்களை கையைப் பிடித்து இழுத்து தொல்லை தருகின் றனர். தேவஸ்தானம் சார்பில் முடிகாணிக்கை டிக்கெட், சுவாமி தரிசனம் டிக்கெட் மற்றும் மலிவுவிலை பூஜை பொருட்கள் விற்பனை நிலையம் செயல்படுகிறது. வெளி மாவட்டம், வெளிமாநிலங் களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, முடி காணிக்கை டிக்கெட், தரிசன டிக்கெட் எங்கே எடுப்பது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். இவர்களிடம், போலி பண்டாரங் கள், தரகர்கள் சுவாமி தரிசனம் செய்ய, முடிகாணிக்கை எடுக்க அழைத்து சென்று அலைக்கழிக் கின்றனர். பணத்தை பறித்ததும் பக்தர்களை தவிக்கவிட்டு செல்கின்றனர்.
பஸ் நிலையத்தில் தொடங் கும் இந்த கட்டாயவசூல் தொல்லை, மலைக்கோயில் கருவறை வரை தொடர்கிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது, ‘மலைக்கோயிலில் சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட், பால் குடம் எடுத்துச் சென்றாலும் போலி பண்டாரங்கள், கையில் வைத்திருக்கும் பூஜை பொருட்களை கேட்கின்றனர். கருவறையில் நின்று தரிசனம் செய்யும்நேரத்தில் அர்ச்சகர்கள் சிலர் 100 ரூபாய் கொடு, 300 ரூபாய் போடு என கட்டாயப் படுத்துகின்றனர். பணம் கொடுத் தால் மட்டுமே நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யவிடுகின்றனர்.
மன அமைதிக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களிடத்தில், இதுபோல செய்வதால் மீண்டும் கோயிலுக்கு வர விரும்புவதில்லை’ என்றனர்.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, ‘கோயிலுக்கு வெளியே நடைபெறும் தொல்லை களை போலீஸார்தான் கட்டுப் படுத்த வேண்டும்.
மலைக்கோயிலில் தவறுகள் நடந்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் எழுதிப் போடப் பட்டுள்ளது. ஆனாலும், நான் விசாரித்து நடவடிக்கை எடுக்கி றேன்’ என்றார்.