

சென்னை: மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைவகித்து மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்கு மகாத்மா காந்திபெரிய பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியாது. சுபாஷ் சந்திரபோஸ்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், சர்தார்வல்லபபாய் படேல்தான் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என எந்த வரலாற்றின் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்.
மகாத்மா காந்திக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும், சுபாஷ் சந்திரபோஸுக்கும், வல்லபபாய் படேலுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதேபோல, 10 ஆண்டுகள் ஒரே சிறையில் செலவழித்த வரலாறும் உண்டு. ஆனால், பாஜகவிடம் சுதந்திரத்துக்காக சிறை சென்ற வரலாற்றுத் தலை வர்கள் யாரும் கிடையாது.
ராமர் கோயிலைதிறந்த காரணத்தால் மக்களவைத் தேர்தலில் பாஜகவெற்றி பெற்றுவிடும் என்று ஒரு காலத்திலும் நினைக்க வேண்டாம்.
ராகுல் காந்தி, ஒரு கொள்கைக்காக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டஎம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் கருத்து: இதனிடையே, தமிழகத்தில் ஏற்படும் சர்ச்சைகளின் மையமாக ஆளுநர் ரவி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
1857-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இப்பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. கவர்னர் - அரசு இடையே ஏற்பட்டுள்ள விரிசல்தான் இதற்குக் காரணம். தமிழகத்தில் பல சர்ச்சைகளின் மையமாக தமிழக ஆளுநர் இருப்பது ஏன்? கவர்னர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.