Published : 28 Jan 2024 06:51 AM
Last Updated : 28 Jan 2024 06:51 AM

தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்து வருகிறது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து

உளுந்தூர்பேட்டையில் நேற்று ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டபோது கட்சிப் பிரமுகரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்து வருகிறது. இச்சூழலில், புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது தேவையற்றது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, உளுந்தூர்பேட்டையில் நேற்று யாத்திரையைத் தொடங்கினார்.

அங்கு அவர் பேசும்போது, “நாளைய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு புதியக் கல்வி கொள்கையை கொண்டுவந்தது. இதை தமிழக அரசு எதிர்ப்பது தேவையற்றது.

இந்த கல்விக் கொள்கைக்குமாற்றாக, புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு கூறியது. ஆனால் 31 மாதங்களாகியும் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 25ஆண்டுகளாக எதைப் படித்தோமோ, அதைத்தான் தற்போதும்படித்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ‘இருமொழிக் கொள்கை’ என்ற பெயரில், அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை பலமொழிகளை கற்க ஆர்வமாக இருந்தாலும், திமுக அரசு அதற்குதடையாக இருக்கிறது. தேவையின்றி புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது.

திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன் 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றனர். ஆட்சி இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், 1.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால், 10,323 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு என்பது கானல்நீராகி விட்டது.

பிரதமர் மோடியை எதிர்க்க ஸ்டாலின், உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்கள் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. பட்டியலின சமூக சிறுமி, திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டார். எனவே, திமுகவினரை மன்னிக்கக்கூடாது.

தமிழகத்திலேயே ஊழல்மிகுந்த நகராட்சி, உளுந்தூர்பேட்டை நகராட்சிதான். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, லஞ்சமில்லாத நிர்வாகம் தேவையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, திருக்கோவிலூர், விழுப்புரத்தில் யாத்திரை மேற்கொண்டார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அண்ணாமலை பேசும்போது, "35 அமைச்சர்கள் உள்ளதிமுக ஆட்சியில், 11 அமைச்சர்கள்மீது ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது பாஜக அதைத்தான் வலியுறுத்துகிறது.

மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே திருமாவளவன் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். வாரிசு அரசியலை உருவாக்கி, தொண்டர்களுக்கு துரோகம் செய்துவருகிறது திமுக. தமிழகத்தை காப்பாற்றவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x