

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேட்டில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கியவாறும், சவால் மிக்க வளைவுகளுடனும் அமைந்துள்ளது. எனவே, இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், உறுப்பு மற்றும் பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த 24-ம் தேதி மாலை தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் பகுதியில் 3 லாரிகள், 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தின் போது வாகனங்கள் தீப்பற்றியதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இந்த இரட்டைப் பாலம் அருகே வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற 12 கார்கள், ஒரு சிறிய சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், கார்களில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர் என 4 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்விரு விபத்து சம்பவங்களில் வாகனங்கள் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த பெரும் விபத்துகள் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் நடந்த விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். மேலும், இந்த விபத்துகளால் பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தொப்பூர் கணவாய் பகுதி சாலையில் நிலவும் கட்டமைப்பு குறைபாடுகளை களையும் வகையில் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டுமென நீண்ட காலமாக ஓட்டுநர் தரப்பு, மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், 24-ம் தேதி கோர விபத்து நடந்த நிலையில், மீண்டும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சாலையில் 6.6 கிலோ மீட்டர் நீளத்தை ரூ.775 கோடியில் சீரமைக்க அண்மையில் மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. இதற்கான ஒப்பந்ததாரரை விரைந்து தேர்வு செய்து நிதியை விடுவித்து பணியை தொடங்க வேண்டும். மேலும், பணியை விரைந்து முடிக்கச் செய்து பாதுகாப்பான சாலையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.
மாநிலங்களை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், ‘தொப்பூர் கணவாய் பகுதியில் 24-ம் தேதி ஏற்பட்டது விபத்து உயிரிழப்புகள் இல்லை. அப்பகுதியின் சாலை சீரமைப்பு தொடர்பாக நிலவிவரும் அரசுகளின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த கொலை அது’ என தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.