Published : 28 Jan 2024 04:00 AM
Last Updated : 28 Jan 2024 04:00 AM
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்த இருப்பதாக பரவிய தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 4 நுழைவு வாயில்களும் நேற்று காலை இழுத்து மூடிய போலீஸார், பொது மக்களின் அடையாள அட்டையை ஆய்வு செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். இது குறித்து விசாரித்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் ஓசன் குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ரூ.450 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.33 லட்சம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து, காவல் ஆணையர் அலுவலகம் தரப்பில் ‘எந்த நுழைவாயிலும் மூடப்படவில்லை, குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாகவும், இது வழக்கமான நடைமுறைதான்’ எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டு வழக்கம் போல் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டன. காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக வெளியான தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT