Published : 17 Feb 2018 09:01 AM
Last Updated : 17 Feb 2018 09:01 AM

பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.வி.சங்கரநாராயணனுக்கு ‘தியாக பிரம்ம நாத விபூஷன்’ விருது: ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா வழங்கியது

இசை கலைஞர் டி.வி.சங்கரநாராயணனுக்கு ‘தியாக பிரம்ம நாத விபூஷன்’ விருதை ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா வழங்கி கவுரவித்துள்ளது.

பி.ஓபுல் ரெட்டி மற்றும் பி.ஞானாம்பா அறக்கட்டளை ஆதரவுடன் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா சென்னை வாணி மகாலில் நேற்று தொடங்கியது. ‘ஸ்ருதி’ இதழின் ஆசிரியர் வி.ராம் நாராயண் விழாவைத் தொடங்கிவைத்து, பிரபல கர்னாடக இசைப் பாடகர் டி.வி.சங்கரநாராயணனுக்கு ‘தியாக பிரம்ம நாத விபூஷன்’ விருதை வழங்கினார்.

பின்னர் ராம் நாராயண் பேசும்போது, ‘‘டி.வி.சங்கரநாராயணன் பெறாத விருதுகளே இல்லை. ‘தியாக பிரம்ம நாத விபூஷன்’ விருதை அவருக்கு வழங்குவது மிகவும் பொருத்தமானது. அவருக்கு இந்த விருதை அளிப்பதில் பெருமை அடைகிறேன்’’ என்றார்.

விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் வி.வி.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் பாடக்கூடியவர் டி.வி.சங்கரநாராயணன். வாதத்தைவிட நாதம் சிறந்தது என்று கருதியே, சட்டத் துறையை தவிர்த்து, இசைத் துறையை தேர்வு செய்து அத்துறையில் சிறப்புற்று விளங்குகிறார்’’ என்றார்.

டி.வி.சங்கரநாராயணன் பேசும்போது, ‘‘ஓபுல் ரெட்டிக்கு என் கச்சேரிகள் மிகவும் பிடிக்கும். இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்த ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, ஓபுல் ரெட்டி - ஞானாம்பா அறக்கட்டளை ஆகியவற்றுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன்’’ என்றார். விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா தலைவர் டெக்கான் என்.கே.மூர்த்தி, செய லர் எஸ்விஎஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

நேற்று தொடங்கிய சத்குரு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா வரும் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு டி.எம்.கிருஷ்ணா, அக்கரை சுபலட்சுமி, பி.சிவராமன், அனிருத் ஆத்ரேயா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனையும், மாலை 6.30 மணிக்கு ஓ.எஸ்.தியாகராஜன், ஜி.சந்திரமவுலி, எஸ்.சங்கரன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மாலை 6.30 மணிக்கு ஈரோடு பாலாஜி பாகவதர் வழங்கும் சங்கீத உபன்யாசம் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x