

முதுமலை: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்கு 75-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அம்முகுட்டி, சங்கர், பாமா,கிருஷ்ணா உள்ளிட்ட யானைகளின் மீது தேசியக் கொடியுடன் பாகன்கள் அமர்ந்திருந்தனர். வனச் சரகர்கள், வனக் காப்பாளர், வனவர், வேட்டை தடுப்புக் காவலர்கள் முன்னிலையில், காப்பக இணை இயக்குநர் திவ்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அப்போது, அணிவகுத்து நின்ற யானைகள் பிளிறியபடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. தொடர்ந்து, யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. விழாவில், சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து, பழங்குடியின இளைஞர்கள், வனப் பணியாளர்கள் பங்கேற்ற கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.