Published : 27 Jan 2024 06:12 AM
Last Updated : 27 Jan 2024 06:12 AM

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது - விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

திருச்சியில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் ஜனநாயக சுடர்களை ஏந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களே இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்' மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்றுமாலை நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மேலும், மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார்.

மாநாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருமாவளவனுக்கும், எங்களுக்கும் இருப்பது தேர்தல், அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத்கரையும் எப்படி யாராலும் பிரிக்க முடியாதோ, அதேபோலத்தான் திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். சகோதரத்துவம், சமத்துவத்தை நிலைநாட்ட இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி உள்ளார்.

உண்மையான கூட்டாட்சி: எனவே, அனைவரும் இணைந்து பணியாற்றி, பாஜகவைவீழ்த்த வேண்டும். மாநாட்டில் கொண்டுவந்துள்ள 33 தீர்மானங்களையும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்ற முயற்சிப்போம். இந்தியாவை உண்மையான கூட்டாட்சிநாடாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்குள்ளது.

தமிழகத்தில் பாஜக பூஜ்ஜியம். எனவே, தமிழக பாஜகவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கான அடித்தளம்தான் `இண்டியா' கூட்டணி. பாஜக ஆட்சியை வீழ்த்துவதை இலக்காகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்துள்ளன.

துரோகிகளை அடையாளம்...: ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது, ஜனநாயகம் இருக்காது, மாநிலங்களும் இருக்காது. ஜம்மு-காஷ்மீர் நிலைதான் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படும். மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைமை மாறுபடும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். எனவே, துரோகிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். கூட்டணி அமைத்தார்கள், ஆட்சியைப் கைப்பற்றினார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கட்சியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 25 கிலோ வெள்ளிக்கட்டிகள், திருமாவளவன் 61 வயதை நிறைவு செய்ததையொட்டி 161 பவுன் பொற்காசுகளை, கட்சி நிதியாக முதல்வர் முன்னிலையில் விசிகவினர் வழங்கினர்.

மாநாட்டில், தி.க தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிபிஐ எம்.எல்.(விடுதலை) பொதுச் செயலர் திபங்கர் பட்டாச்சார்யா, தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர் மொய்தீன், மமகதலைவர் ஜவாஹிருல்லா, தவாகதலைவர் தி.வேல்முருகன், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x