Published : 27 Jan 2024 01:01 PM
Last Updated : 27 Jan 2024 01:01 PM
கோவை: கோவை மாநகரில் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றி சரி செய்வதற்காக, 5 ரோபோட்டிக் இயந்திரங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படும்போது, ‘மேன்ஹோல்’ வழியாக தொழிலாளர்கள் உள்ளே இறங்கி கழிவுகளை சுத்தப்படுத்தும் நிலை உள்ளது.
ஆட்களை பயன்படுத்துவதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில் ரூ.2.12 கோடி மதிப்பில் 5 ரோபோட்டிக் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த இயந்திரங்கள் தொடக்கத்தில் சில நாட்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், போதிய பயிற்சி இல்லாததால் பயன்படுத்தப்படுவது குறைந்தது. இந்த இயந்திரங்களும் குப்பையோடு குப்பையாக கிடப்பில் போடப்பட்டன.
இச்சூழலில், இந்த இயந்திரங்கள் குறித்து அறிந்த தற்போதைய மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் அந்த இயந்திரங்களை மீண்டும் சரி செய்து பயன்படுத்த முடிவு செய்தார்.
இதையடுத்து, 5 ரோபோட்டிக் இயந்திரங்களும் சீரமைக்கப்பட்டன. மேலும், இயந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கான ரோபோட்டிக் இயந்திரங்கள் கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் உள்ளன. இயந்திரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT