

அரூர்: கம்பைநல்லூர் அருகே விசிக மாநாட்டுக்கு சென்ற பேருந்து மினிலாரி மீது மோதியதில் 7 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பேருந்து கண்ணாடி உடைப்பு, சாலை மறியல் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பத்தல அள்ளியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 60 பேர் திருச்சியில் நடைபெறும் அக்கட்சியின் மாநாட்டுக்கு தனியார்பேருந்துமூலம் நேற்று காலை புறப்பட்டனர். பேருந்தை தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் (24) என்பவர் ஓட்டினார்.
பொம்மிடி ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி மீது பேருந்து மோதியது. பின்னர் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி நின்றது.
இதில், மினி லாரி ஓட்டுநர் வாசிகவுண்டனூரைச் சேர்ந்த சத்யராஜ் (38), பேருந்தில் வந்த பத்தலஅள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் (50), மாதம்மாள் (45), மணியரசு (23), சுப்பிரமணி (30), விமல் குமார் (34), அமிதாப் (40) ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது எனக்கூறிவிசிக-வினர் பேருந்து கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
விபத்து ஏற்படுத்தும் வகையிலான ஓட்டுநரை அனுப்பிய பேருந்தின் உரிமையாளரைக் கண்டித்து பொம்மிடி ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். மறியலால் கடத்தூர் -பொம்மிடி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பத்தலஅள்ளியைச் சேர்ந்த பிரதீப் குமார் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து ஓட்டுநர் முகேஷை பொம்மிடி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.