

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்துதேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமநீதி கண்ட சோழன் சிலை அருகே நடைபெற்ற 75-வது குடியரசு தினவிழாவில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பாரம்பரிய வேட்டி,சட்டை அணிந்து வந்து தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் சிஐஎஸ்எஃப் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலைமை நீதிபதி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பின்னர், சிஐஎஸ்எஃப் போலீஸாரின் மோப்ப நாய்களின் சாகசநிகழ்ச்சி நடந்தது. இதில், மோப்பநாய் ஒன்று தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றது. அதைத்தொடர்ந்து, சிஐஎஸ்எஃப் போலீஸார் பல்வேறு சாகசங்களைச் செய்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.
சட்ட அமைச்சர் பங்கேற்பு: இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாநிலஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் உள்ளிட்ட மத்திய, மாநிலஅரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், தமிழக அரசின்தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் பார் கவுன்சில் துணைத்தலைவர் வி.கார்த்திகேயன், இணை தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயற்குழு கமிட்டிதலைவர் ஜெ.பிரிஸில்லா பாண்டியன், பார் கவுன்சில் உறுப்பினர் ஜி. தாளைமுத்தரசு உட்பட பலர் பங்கேற்றனர்.