Published : 13 Feb 2018 10:00 AM
Last Updated : 13 Feb 2018 10:00 AM

இணையவழி ஆவணப் பதிவுக்கு 11 வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி: சேவை மையத்தை அறிமுகப்படுத்தி பதிவுத்துறை நடவடிக்கை

இணையவழி ஆவணப்பதிவைத் தொடர்ந்து, பதிவுக்கான கட்டணத்தை இணையவழி கட்டும் வசதியில் 11 வங்கிகளை பதிவுத்துறை சேர்த்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் இணையவழி ஆவணப்பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பதிவுக்கான ஆவணத்தை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு அனுப்பி முன்சரிபார்ப்பு முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆவணப்பதிவுக்கான முன் அனுமதி பெறுவதும் இணையவழியிலேயே மேற்கொள்ளலாம்.

இதுதவிர, ஆவணப்பதிவு தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வரைவு ஆவணம் சார்பதிவாளரால் சரிபார்க்கப்பட்ட உடனும், பதிவுக்குப்பின் ஆவணம் தயாராகிய பின்னரும், ஆவணம் நிலுவை வைக்கப்படும்போது அதற்கான காரணம், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட நகல் திரும்ப அளிக்க தயாராக உள்ளபோதும், மதிப்புக் குறைவு காரணமாக தனித்துணை ஆட்சியருக்கு ஆவணம் அனுப்பப்படும்போதும், இவற்றுக்கான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் அளிக்க பதிவுத்துறை வசதி ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைப்பு

இணைய வழி மற்றும் நேரடியாகவும் பதிவுத்துறைக்கு கட்டணம் செலுத்துவதற்காக மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கெனவே 6 வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும் 5 வங்கிகள் புதிதாக சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, ஐடிபிஐ, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய 11 வங்கிகள் மூலம் தற்போது கட்டணம் செலுத்தலாம்.

மேலும், 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைக் கொண்ட சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவுத்துறையின் சேவைகள் குறித்த விவரங்கள், ஆலோசனைகளைப் பெறலாம். இத்தகவல்களை பதிவுத்துறை தெரி வித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x