Published : 26 Feb 2018 07:25 AM
Last Updated : 26 Feb 2018 07:25 AM

நாட்டில் வகுப்புவாதத்தை ஒடுக்க இடதுசாரிகள் ஒன்றிணைவதுதான் தீர்வு: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் யோசனை

நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள வகுப்புவாதத்தை ஒடுக்க இடதுசாரிகள் ஒன்றிணைவதுதான் தீர்வு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற 2 நாள் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர், நிறைவு நாளான நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னை வந்த பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

காவிரி விவகாரத்தை சாதாரண தண்ணீர் பிரச்சினையாக மட்டும் கருதாமல், தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டு வறட்சி நிவாரணத்துக்கும், வார்தா மற்றும் ஒக்கி புயல் பாதிப்பு போன்ற இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை சீரமைக்கவும் மத்திய அரசிடம் ரூ.62,000 கோடியை தமிழக அரசு நிவாரணமாக கேட்டது. ஆனால், கொடுத்ததோ ரூ.2 ஆயிரம் கோடி. தேவையான தொகையை உரிய முறையில் கேட்டுப் பெறுவதற்கு தமிழக அரசு முயற்சிக்கவில்லை. அதற்கான துணிவும், மத்திய அரசை தாங்கி ஆட்சி நடத்தும் இவர்களிடம் இல்லை.

நாட்டில் வகுப்புவாதம், பொருளாதார சீரழிவு போன்ற பிரச்சினைகள் மக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவற்றை இடதுசாரிகளால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். எனவே, நேபாளத்தைப் போன்று நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

இதுதொடர்பாக, மன்னார்குடியில் மார்ச் மாதம் நடைபெற உள்ள மாநில மாநாட்டிலும், ஏப்ரலில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டிலும் பிரதானமாக வலியுறுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x