26 ஆயிரம் பத்திரப் பதிவு: ஒரே நாளில் சாதனை

26 ஆயிரம் பத்திரப் பதிவு: ஒரே நாளில் சாதனை
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் 26 ஆயிரம் பத்திரங்கள் பதியப்பட்டு, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, ஜன.31-ம் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தவகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜன.22-ம் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப்பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜன.24-ம் தேதி பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிகபட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஜோதிநிர்மலாசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in