

சேலம்: சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
தொகுதி எம்எல்ஏவான பாமகவைச் சேர்ந்த அருள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரான திமுகவைச் சேர்ந்த ராஜா, தலைமை ஆசிரியர் அருளானந்தம் மற்றும் திமுக, பாமகவினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பள்ளியில் இடைநிலை பருவத்தேர்வு நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியை விரைந்து நடத்தவேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். தலைமை ஆசிரியர் அருளானந்தம், எம்எல்ஏ அருள் ஆகியோர் ஓரிரு நிமிடங்கள் பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா பேசுவதை தவிர்த்துவிட்டார்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்க முற்பட்டபோது, திமுகவினர் சிலர்,தங்களுக்கு ஏன் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கேட்டதால்,அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, திமுக-பாமகவினரிடையே வாக்குவாதம் முற்றியது.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு வருந்துவதாகத் தெரிவித்த எம்எல்ஏ அருள், தரையில் விழுந்துகும்பிட்டு, மாணவ, மாணவிகளிடம் மன்னிப்பு கோரினார். இதனால், மாணவ, மாணவிகள் திகைப்படைந்தனர். பின்னர் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து எம்எல்ஏ அருளிடம் கேட்டபோது, ‘‘மற்றொரு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியிருந்ததால், நிகழ்ச்சியை விரைவாக நடத்த முடிவுசெய்தோம். ஆனால், சிலர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதால், அவர்களிடம் மன்னிப்பு கோரினேன். பள்ளி மாணவர்கள் வளர்ச்சியில் எப்போதும் எனக்கு அக்கறை உண்டு" என்றார்.