

மேட்டூர்: எடப்பாடி, பூலாம்பட்டி பகுதியில், பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் கொள்முதல் செய்யப்படாததால் வயல்களில் தேக்கமடைந்துள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி, பூலாம்பட்டி, கோல்நாயக்கன்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்தனர்.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புக்காக, பூலாம்பட்டியில் முகாமிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள், விவசாயிகளின் தோட்டத்தில் கரும்புகளை ஆய்வு செய்து கொள்முதல் செய்தனர்.
தொடர்ந்து சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 40 லட்சத்துக்கும் மேற்பட்ட கரும்புகளை அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். இதனிடையே, எடப்பாடி, பூலாம்பட்டி பகுதியில் பல இடங்களில் கரும்புகளை கொள்முதல் செய்யாததால், வயல்களில் அறுவடை செய்யாமல் வெயிலில் காய்ந்து வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை யொட்டி, எடப்பாடி, பூலாம்பட்டி பகுதியில் அதிகளவு கரும்பு சாகுபடி செய்தோம். தமிழக அரசு கரும்புகளை கொள்முதல் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, பல இடங்களில் கரும்புகளை கொள்முதல் செய்யவில்லை. மேலும், பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் காரணமாக, வியாபாரிகள் கொள்முதல் செய்ய வந்த போது பலரும் மறுத்து விட்டனர். பின்னர், அதிகாரிகள் கொள்முதல் செய்யவரவில்லை.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வயல்களில் 30 சதவீதம் கரும்புகள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன. இதனால் வெயிலில் கரும்புகள் காய்ந்து வருகின்றன. வயல்களில் அறுவடை செய்யாமல் உள்ள கரும்புகளை, சென்னிமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம். வியாபாரிகளிடம் கரும்பை விற்று இருந்தால் கூட செலவுக்கு செய்ததற்கு போக, ஓரளவு மீதி இருக்கும். தற்போது, ஒரு கரும்பு ரூ.8 முதல் ரூ.10 வரை எடுத்து ஆலைகள் எடுத்துக் கொள்கின்றன, என்றனர்.