

சென்னை: தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத் தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வடபழனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், பால் குடம் எடுத்து வந்தவர்கள், பொது தரிசனத்துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர்.
இரவு 8.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல, பாரிமுனை கந்தகோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, திருப்போரூர், குரோம்பேட்டை குமரன்குன்றம் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.