

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பிப்.8-ம் தேதி வரை ஏரியா சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. திரு.வி.க.நகர் மண்டலம், 74-வது வார்டு கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா நேற்று பங்கேற்று குறைகளைக் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புறஉள்ளாட்சிகளில் ஏரியா சபைகளை அமைத்து, அதில் உள்ளூர் மக்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, பகுதி அளவிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த ஏரியா சபைகள் ஆண்டுக்கு 4 முறை கூட வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளும் ஜன.25 முதல் பிப்.8-ம் தேதி வரை ஏரியாசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் உள்ள 2 ஆயிரம் ஏரியா சபைகளும் பிப்.8-ம் தேதிக்குள் கூட்டங்கள் நடத்தி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்கட்டமாக, திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள 74-வது வார்டில் நேற்று நடைபெற்ற ஏரியா சபை கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று குறைகளைக் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஏரியா சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா, விளையாட்டுத் திடல், மின்விளக்கு வசதி, குடிநீர்,கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்புடைய கோரிக்கைகளைத் தெரிவித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மேயர்உத்தரவிட்டார். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படும் என்று மேயர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில், திரு.வி.க.நகர் மண்டல அலுவலர் முருகன், வார்டு கமிட்டி செயலாளர் சரஸ்வதி, உதவி செயற்பொறியாளர் மாதவ சங்கர், ஏரியா சபை செயலாளர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.