

தேமுதிகவினர் மீதுள்ள வழக்குகள், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு போடப்பட்ட பொய் வழக்குகள் என தேமுதிக கொறடா சந்திரகுமார் கூறினார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நிருபர்களிடம் தேமுதிக கொறடா சந்திரகுமார் கூறியதாவது:
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது, ‘கடந்த ஜூலை 26-ம் தேதி சென்னையில் மட்டும் 9 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற செயின் பறிப்பு குற்றங்களை முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்றேன். உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து, ‘தேமுதிகவினர் பலர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சட்டம் ஒழுங்கு குறித்து பேச தேமுதிக உறுப்பினர்களுக்கு தகுதி இல்லை’ என்றார்.
அதிமுக கூட்டணியில் இருந்த வரை எங்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தேமுதிகவினர் மீது இப் போதுள்ள வழக்குகள், கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் போடப்பட்ட பொய் வழக்குகள்தான்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா இழுத்தடித்து வருகிறார். அதிமுகவினர் பலர் மீது கொலை, பாலியல் மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு குறித்து பேச அதிமுகவுக்கு தகுதி இருக்கிறதா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
தேமுதிகவினர் மீது இப்போதுள்ள வழக்குகள், கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் போடப்பட்ட பொய் வழக்குகள்தான்.