Published : 06 Feb 2018 05:32 PM
Last Updated : 06 Feb 2018 05:32 PM

நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்

இந்தியா முழுவதும் இயங்கி வரும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 708 துணை சுகாதாரநிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ள மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

“இந்தியா முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 708 துணை சுகாதாரநிலையங்கள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதாரநிலையம் வீதம் உள்ளன. மலைப் பகுதிகளில் 3 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது. மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள அடிமட்ட சுகாதார நிலையங்கள் இவையே.

நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோரை உயர் மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கும் மையங்களாக உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பேறுகாலத்தில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறுக்குப் பிந்தைய நிலையில் உள்ள பெண்களுக்கும் ,மருத்துவ ரீதியான உதவிகள் இம்மையங்களின் மூலம் வழங்கப்படுகின்றன.

குடும்ப நலத்திட்டம், கருத்தடை சாதனங்களை வழங்குதல்,குடும்பநல ஆலோசனை வழங்குதல் போன்றவையும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல்,தேசிய அளவிலான பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பணிகளை உதவி சுகாதார நிலையங்கள் செய்துவருகின்றன.

இவற்றின் பணி மகத்தானவை. ஆனாலும் இம் மையங்களில் உள்ள குறைபாடுகளை போக்கி அவற்றின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், அதைச் செய்யாமல் , இம்மையங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கும் மெகா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது. இது கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள , தேசிய நலக் கொள்கை 2017-ல் இந்த மையங்களை சுகாதார மற்றும் நல (Health and wellness ) மையங்களாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் 2018-19 நிதிநிலை அறிக்கையில், 1.50 லட்சம் சுகாதார மற்றும் நல மையங்களை உருவாக்க ரூ 1200 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது துணை சுகாதார நிலையங்களை, சுகாதார மற்றும் நல மையங்களாக (Health and Wellness) மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

சுகாதார மற்றும் நல ( Health and wellness ) மையங்களாக மாற்றப்படும், இந்த துணை சுகாதார நிலையங்களை (Sub centres), கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பல்வேறு தனியார் அமைப்புகளிடமும் வழங்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் துணை சுகாதார நிலையங்களை தனியாரிடம் வழங்கும் மத்திய அரசின் இத்திட்டம் கிராமப்புற ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.

ராஜஸ்தான் ,மஹாராஸ்டிரா, தெலுங்கான போன்ற மாநிலங்களில் ஏற்கனவே பல ஆராம்ப சுகாதார நிலையங்கள் மத்திய அரசின் நிர்பந்தத்தால் தனியாரிடம் விடப்பட்டுள்ளன. நிதி அயோக், மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கைகளை தனியாருக்கு வழங்க வேண்டும் என மாநில அரசுகளை நிர்பந்தப்படுத்தி வருகிறது. இரண்டாம் நிலை மூன்றாம் நிலை சிகிச்சை முறைகளையும் தனியார் மயப்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்துகிறது.

இந்நிலையில் ,கிராமப்புற மக்களுக்கு நேரடியாக மருத்துவ உதவிகளை வழங்கும், துணை சுகாதர நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் செயல், அனைவருக்கும் தரமான சிக்கிச்சைகளை இலவசமாக வழங்கும் தனது பொறுப்பை மத்திய அரசு முற்றிலும் தட்டிக் கழிக்கும் செயலாகும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளையும், பொது சுகாதாரத்துறையையும், தனியார் மயமாக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத செயலை எதிர்த்துப் போராட அனைவரும் முன்வர வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x